Monday, October 12, 2015
கருத்து சுதந்திரம் காக்க சாகித்ய அகாடமி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: 16 தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை:
கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க சாகித்ய அகாடமி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற 16 தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோக மித்திரன், தோப்பில் முகமது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, மேலாண்மை பொன்னுசாமி, புவியரசு, நாஞ் சில் நாடன், சு.வெங்கடேசன், டி.செல்வராஜ், பூமணி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதச்சார்பற்ற, ஜனநாயக, சோஷலிச குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங் களும், பன்முகத் தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது. இது குறித்து எங்களது அச்சத்தையும், கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். இந்தப் படுகொலைக்கு எதிராக நாடெங்கும் வலுவான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், சாகித்ய அகாடமி நேரடியான வார்த்தைகளில் இதனை கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தம் அளிக்கிறது.
எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடுவது ஒருபுறம் இருக்க, அவர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலை உருவாகியுள்ளது. இச்சூழலில் பொதுவான அறிக்கையுடன் அகாடமி நிற்பது போதாது என்று கருதுகிறோம். கருத்துச் சுதந்திரத் தைப் பாதுகாக்க இன்னும் உறுதியான நடவடிக்கை தேவை என வலியுறுத்துகிறோம்.
பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்தியா வின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு, உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை.
ஆனால், மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தும் படைப்பாளிகள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும் தொடர்கிறது. மக்களின் பன்முக பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துக்களையும் வன்முறையால் எதிர்கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ்கிறது. இதனை கண்டிக்கிறோம். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி நிர்வாக குழு 23–ந்தேதி அவசரமாக கூடுகிறது
மேலும் 6 எழுத்தாளர்கள் விருதை ஒப்படைக்க முடிவு:
புதுடெல்லி
15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளதால், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க சாகித்ய அகாடமி நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடக்கிறது. மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருதுகள்
கர்நாடக மாநிலத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற பகுத்தறிவு எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சமீபத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது எழுத்தாளர்கள் மத்தியிலும், சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருகிறார்கள். நாட்டில் மத ரீதியான மோதல்கள் அதிகரித்து இருப்பதாலும், சகிப்புத்தன்மை குறைந்து வருவதாலும், கல்புர்கி படுகொலையில் சாகித்ய அகாடமி மவுனமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுகளை ஒப்படைப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
15 எழுத்தாளர்கள்
இதுவரை 15 எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளனர். நேற்று மேலும் 6 எழுத்தாளர்கள் விருதுகளை ஒப்படைக்க முடிவு செய்தனர். காஷ்மீர் எழுத்தாளர் குலாம்நபி காயல், கன்னட எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீநாத், ராஜேஷ் ஜோஷி, இந்தி எழுத்தாளர் மங்களேஷ் டப்ரால், வார்யம் சாந்து, ஜி.என்.ரங்கநாதராவ் ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.
இதில் மங்களேஷ் டப்ரால், ராஜேஷ் ஜோஷி, ஸ்ரீநாத் ஆகியோர் நேற்றே தங்கள் விருதுகளை ஒப்படைத்துவிட்டனர். மற்றவர்கள் தங்கள் முடிவை சாகித்ய அகாடமிக்கு தெரிவித்துள்ளனர். மும்பையை சேர்ந்த உருது எழுத்தாளர் ரஹ்மான் அப்பாஸ், குஜராத்தை சேர்ந்த பிரபல கவிஞர் அனில்ஜோஷி ஆகியோரும் நேற்று தங்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர்.
பேனா–துப்பாக்கி குண்டு
குலாம்நபி காயல் கூறும்போது, ‘‘நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பற்றவர்களாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் உணர்கிறார்கள். பேனா இருக்க வேண்டிய இடத்தில், இப்போது துப்பாக்கி குண்டுகள் பாய்கிறது’’ என்றார்.
எழுத்தாளர்கள் டப்ரால், ஜோஷி ஆகியோர் கூறும்போது, ‘‘கல்புர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நாட்டில் இப்போதுள்ள சூழ்நிலைக்கு கண்டனம் தெரிவிப்பது அகாடமியின் கடமை’’ என்றனர். ஜோஷி உள்பட சிலர் விருதுடன், தங்கள் பரிசு தொகையையும் திருப்பி அனுப்பியதாக கூறியுள்ளனர்.
அதோடு அகாடமியின் நிர்வாகிகள் குழு இந்த பரிசுத்தொகையை என்ன செய்வது? என்பது குறித்து இப்போதே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
23–ந்தேதி அவசர கூட்டம்
எழுத்தாளர்கள் தொடர்ந்து தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வருவதால் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் சாகித்ய அகாடமியின் நிர்வாகிகள் குழுவின் அவசர கூட்டம் 23–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துவருவதால், இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டாலும், அகாடமியின் பெரும்பாலான நிர்வாகிகள் தற்போது டெல்லிக்கு வெளியே இருப்பதால் 23–ந்தேதி கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகாடமியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
Sunday, October 11, 2015
மறைந்தார் மனோரமா!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1943ம் ஆண்டு மே, 23 ம் தேதி பிறந்தவர் கோபி சாந்தா. சினிமாவுக்காக மனோரமா என்று பெயர் மாற்றப்பட்டார். ராஜமன்னார்குடியில் 6ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது, 12 வயதில் நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1960ல் 'களத்துார் கண்ணம்மா' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கால்பதித்தார். தமிழ் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து, 1000 படங்களுக்கும் மேல் நடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோருடன் நாடகத்திலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, வில்லி மற்றும் குணச்சித்திரம் உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி, 300க்கும் மேற்பட்ட பாடல்களும் பாடியிருக்கிறார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 'பத்ம ஸ்ரீ' மற்றும் தமிழக அரசின் 'கலைமாமணி' மற்றும் தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். சினிமா ரசிகர்களால் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர். கடைசியாக, 'சிங்கம் 2' படத்தில் நடித்திருந்தார். விரைவில் தயாரிக்கப்படும் 'சிங்கம் 3' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

Thursday, October 8, 2015
அக்டோபர் - 8
பாட்டாளிகளின் கவிஞன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
\
நினைவு நாள்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
அக்டோபர் - 8
பாட்டாளிகளின் கவிஞன்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
\
நினைவு நாள்
Monday, October 5, 2015
அக்டோபர் 5, 1823 - வள்ளலார் பிறந்த நாள்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற கூற்றின் சொந்தக்காரர் வள்ளலார் இதே தினத்தில் தான் பிறந்தார். 1823ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார் ராமலிங்க அடிகளார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார். சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலார் 1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பா வாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது. வள்ளலாரின் திருவருட்பாவிற்கு எதிராகவும் அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் பல கண்டனங்கள் அந்த காலகட்டத்தில் எழுந்தன. இவர் சைவ சமயத்தை முழுவது மாற்றுவதாக எண்ணி இவரது திருவருட்பாவிற்கு எதிராக, பல கண்டன நூல்களும் வெளியாகின.

இன்று சுப்பிரமணியம் சிவா பிறந்த நாள் 1884, அக்டோபர் 4-ம் நாள் )
இவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்.. வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப் பழகியவர். 'வீரமுரசு' எனப் புகழ்பெற்றவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப் பேச்சாளர். சிறந்த பத்திரிக்கையாளர். 1913-ல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர்

இன்று திருப்பூர் குமரன் பிறந்த தினம்
(அக்டோபர் 4, 1904 )
இவர் இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் காந்தியடிகளால் மீண்டும் தொடங்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் காங்கிரஸின் இந்திய தேசீயக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று , அணிவகுத்துச் சென்றார். கொடியினைக் கீழே போடுமாறு காவலர்கள் மிரட்டியும் அதற்குப் பணியாமல் கொடியினை மேலும் உயர்த்திப் பிடித்து வந்தே மாதரம் என்று கோஷத்தை முழங்கினார். காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் தேசியக் கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிர் துறந்தார் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.
Friday, October 2, 2015
அக்டோபர் 2:பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு

* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!
* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!
* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!
* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது தெரியும். கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவுநாளும் அதே தினம் தான்.
அதே தினத்தில்தான் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரும் பிறந்தார்.
எளிமை,நேர்மை அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் மனைவியிடம் "இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
லால் பகதூர் சாஸ்திரி போன்ற உன்னத ஆத்மாக்கள் அரசியலில் அரிதாகத்தான் தோன்றுகிறார்கள்!
இன்று (அக்.01) உலக முதியோர் தினம்.
சுருங்கிய தோல்கள், மங்கிய கண்கள், நரைத்த முடி ஆகியவற்றுடன் அனைவரது குடும்பத்திலும் முதியோர் இருக்கின்றனர். வாழ்க்கைப் பயணத்தில் இவர்கள் பெற்ற குழந்தைகளுக்காக உழைத்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி நிற்கின்றனர். இவர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தை மறக்காமல், அவர்களிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் நாள், சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும். இந்த ஆண்டு உலக முதியோர் தினத்தின் நோக்கம், `வயதானவர்களின் உரிமைகள்' என்பதே. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!


இன்று செப்டம்பர் 28 உலக ரேபிஸ் தினம்
உலக வெறி நோய் தினம் என்றும் சொல்லலாம் !
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
இன்று இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி மாவீரன் பகத் சிங் பிறந்த நாள், செப்டம்பர் 27, 1907.
இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த ஆங்கிலேய காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.
Subscribe to:
Comments (Atom)










