Friday, December 11, 2015

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
தஞ்சை மாவட்டக் குழு.
கண்டனக் கூட்டம்.

   கருத்துரிமை மற்றும் பண்பாட்டுரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து 07-11-2015 அன்று தஞ்சாவூரில் AITUC  மாவட்டச் சங்கக் கட்டிடத்தில் கண்டனக் கூட்டம் மாவட்டச் செயலாளர் தோழர். ஆ. குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. 

   பல்வேறு இலக்கிய அமைப்புக்களைச் சார்ந்த கீழ்க்கண்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

     முனைவர். பெ. ராமலிங்கம், தலைவர், முள்ளி வாய்க்கால் முற்றம்.
தோழர். எஸ்.சிவசிதம்பரம், மாவட்டத் தலைவர், த.க.இ.பெ.மன்றம்.
தோழர். கே. இராசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
தோழர். வைகறை, தமிழ் இலக்கியப் பேரவை.
தோழர். சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கிய வட்டம்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  1. கருத்துரிமை மற்றும் பண்பாட்டுரிமைக்கு எதிரான வன்மங்களைக்         கண்டிப்பது.
  2. மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்று வரும் ஊழல் மற்றும்          
      மதவாத  சக்திகளுக்கு மாற்றாக மக்கள் நல, மதச்சார்பற்ற,     
      முற்போக்கு அரசியல் சக்திகளுக்கு ஆதரவளிப்பது. 
  3. மக்கள் இசைப் பாடகர் கோவனை விடுதலை செய்ய    
      வலியுறுத்துவது.

        இறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர். அய்யாறு. புகழேந்தி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

Thursday, November 12, 2015


வரலாற்றில் இன்று - நவம்பர் 7-1917, உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரஷ்யாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு முதல் முறையாக லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் அரசு ரஷ்யாவில் அமைக்கப்பட்டது. அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும் என்று உலகுக்கு காட்டிய நாள். ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்பட்டு வந்த உழைக்கும் வர்க்கம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.



இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இன்று நவம்பர் 6, 1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். சிறு வயது முதலே பல தோல்விகளை சந்தித்தார் . தோல்வி என்பது அவரின் வாழ்கையின் ஒரு நிரந்தர நிகழ்வாக இருந்தது. இருப்பினும் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.



இன்று உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு நாள் 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 கேலியும்,கிண்டலும், துள்ளலான நடையழகும் கொண்ட பெர்னார்ட்ஷாவின் நாடகங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அவர் எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்ந்த வாழ்க்கையும் கூட வண்ணமயமானதுதான். உலக இலக்கியத்தின் உச்சம் என்றால், அது நோபல் பரிசுதான். பெர்னாட்ஷா ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளல்களில் ஒருவராக, ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுபவர். அவரது நாடகங்கள், ஆய்வுப்படைப்புகள், சிந்தனைகள் அனைத்தும், இன்றைய வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுபவை. இத்தனைக்கும், பெர்னாட்ஷா எழுதிய விஷயங்கள் ஒவ்வொன்றும், நெருப்புப்போல, வரிக்கு வரி நகைச்சுவை பொங்கும் எழுத்து. ஆனால் சிரித்து முடித்த அடுத்த வினநாடி, அதன் பின்னணியில் இருக்கும் நிஜம் நெஞ்சைச் சுடும். சமூகத்துக்காக ஏதாவது உடனே செய்தாகவேண்டும் என்கிற வேகம் உண்டாகிவிடும். நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு இரண்டையும் வென்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா தவிர உலகில் வேறு யாரும் இல்லை. உலகப் புகழ் பெற்ற உன்னதப்படைப்பாளியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை



இன்று பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ) நினைவு நாள் - நவம்பர் 2, 1903. இவர் ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு பங்கு வகித்தவரும் ஆவார். உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார். இதுபோல் வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் எப்போதுமே பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: "புருவங்கள் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் இன்னும்கூட நான். வாழ்ந்து கொண்டுதான் உள்ளேன். ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே." தமிழைக் காத்த பெருந்தகையை அவரது நினைவு நாளில் போற்றுவோம்